தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுடைய தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் விதமாக, வீல்ஸ் 2019 ஜவுளிக் கண்காட்சி ஈரோடு மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டெக்வேலி, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள டெக்வேலி வர்த்தக நிலையத்தில் நடைபெறும்.
இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் தங்களது தயாரிப்பைக் காட்சிப்படுத்தவுள்ளனர். இந்தக் கண்காட்சியில் பாரம்பரிய, பின்னலாடைகள், கைத்தறி, காதி, வீட்டு அலங்காரப் பொருட்கள், ஜவுளி இயந்திரங்கள், உதிரிப் பாகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தும் விதமாகவும், அவர்கள் தங்களுக்குள் ஒரு வலைப்பின்னல் ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் சந்திரமோகன், "கைத்தறி, பாரம்பரிய ஆடை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயலாற்றி வரும் சிறு சிறு நிறுவனங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சி இது. நம்மூர் நிறுவனங்கள் சர்வேதச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு, இதேபோன்ற நிகழ்வு வெற்றிகரமாக நிகழ்ந்ததையொட்டி, இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் வீல்ஸ் கண்காட்சி நடத்தப்படுகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய டெக்வேலியின் துணைத் தலைவர் தேவராஜன், "விசைத்தறியிலும், கைத்தறி தொழிலும் ஈடுபடும் நெசவாளர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில், இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ஆடை உற்பத்தியில் ஈடுபடுபவர்களும், ஆடைகளை மொத்தமாக வாங்கி ஏற்றுமதி செய்பவர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும். மக்களும் இதனைப் புரிந்து ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:
சிறுவனின் உயிரை பறித்த மாஞ்சா நூல்: நால்வரிடம் விசாரணை... 2 பேர் கைது!