சென்னை: கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கம்மைக்கான பரிசோதனை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய அவர்களில் இரண்டு சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் என்றும் இங்கே தற்போது வரையிலும் குரங்கம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு இந்தியா முழுவதும் 15 இடங்களில் குரங்கம்மை பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் குரங்கம்மைக்கான ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கிங் நோய் ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஆய்வகம் அமைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் அதனை தற்பொழுது ஆய்வு மேற்கொண்டு திறந்து வைத்துள்ளதாக தெரிவித்தார். இனி குரங்கம்மை பரிசோதனை எடுத்து மாதிரிகளை பூனேவிற்கு அனுப்பி வைக்க தேவையில்லை கிங்ஸ் மருத்துவமனையில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அங்கேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறோம் என்றார். மேலும், 187 நாடுகளில் இருந்து வந்திருக்கக்கூடிய 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் வரையிலும் காப்பீட்டு திட்டம் உள்ள 13 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றார்
செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் மகாபலிபுரத்தில் 1000 மருத்துவ பணியாளர்கள் 30 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் 8 மாத கர்ப்பிணி வீராங்கனைக்காக தனியாக மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடலுறவு மூலம் குரங்கம்மை பரவல்… அதிர்ச்சி தகவலும்... மருத்துவ நிபுணர்களின் விளக்கமும்...