கடலோர காவல் படையில் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பதக்கம் வழங்கும் விழா சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (OTA) நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற 61 வீரர்களுக்கு தட்ரக்ஷக் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடு தற்போது வேகமாக வளர்ந்து வரும் அதே நேரத்தில் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றார். அரசுகள் முன்னெடுக்கும் பயங்கரவாதம் மற்றும் பிற பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தற்போது இருந்து வருவதாகவும், இந்த நேரத்தில் நாட்டு மக்களை பாதுகாப்பாக உணர வைப்பது மிக முக்கியமானது என்றும் கூறினார். இந்த பணியில் கடலோர காவல் படை ஈடுபட்டு வருவதாகக்கூறிய அவர், அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளதையும் நினைவுகூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் இயக்குனர், கடலோர காவல் படையின் கிழக்கு கமாண்டர் மற்றும் கடலோர காவல் படை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.