சென்னை வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி விஜயதாஸ் (29). இவர் பிரபல ரவுடி சோமு என்கிற சோமசுந்தரத்தின் கூட்டாளி ஆவார்.
முன்னாள் எம்.எல். ஏ. எம்.கே பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் உள்ளார். மேலும் இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரது தங்கை ஜோதி என்பவர் ஜெயகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தங்கையின் காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லாததினால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கை கணவர் ஜெயகுமாரை, விஜயதாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து வியாசர்பாடி அருகே வெட்டி கொலை செய்தனர்.
இதில் கைதான ரவுடி விஜயதாஸ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு ரவுடி விஜயதாஸ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (19.08.20) இரவு வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் நடந்து சென்ற ரவுடி விஜயதாஸை ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓன்று வழிமறித்து அரிவாளால் ஓட ஓட வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரவுடி சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை