சென்னை: 144 இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை மறு சீரமைப்பு பணிக்காக விடப்பட்ட 119.93 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளது. 2019ஆம் ஆண்டு பருவ மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மழை நீர் வடிகால்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்தது.
அதில் சுமார் 144 இடங்களில் மழைநீர் வடிகால் முழுவதும் பாதிப்படைந்து பராமரிப்பின்றி காணப்பட்டது. இந்நிலையில் இந்தப் பாதிப்பை சீரமைக்க, உலக வங்கி கடன் தர ஒத்துக்கொண்ட நிலையில் கிட்டத்தட்ட 144 இடங்களில் 43 தொகுப்புகளாக (43 package) சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்கான டெண்டர் முதலில் விடப்பட்டது. 43 தொகுப்புகளில் 42 தொகுப்புகளுக்கான டெண்டர் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பெறப்பட்டது. ஆனால் இந்த டெண்டரில் குறைபாடு உள்ளதாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை (TNUIFSI) தெரிவித்ததால், ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
தற்போது தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை உலக வங்கியுடன் இணைந்து 34.98 கோடி ரூபாய் கடனாகவும், திட்ட நிலைத்தன்மை மானிய நிதி (PSGF) மூலம் 73.02 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 12 கோடியும் என மொத்தம் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சீரமைக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதற்கான குறுகிய கால இ- டெண்டர் விரைவில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொடைக்கானலை உருவாக்க உதவிய வெள்ளக்கெவி மக்கள் - சாலை வசதி இல்லாமல் தவிப்பு