சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் 2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், '12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த தேர்வினை 7600 பள்ளிகளில் படிக்கக்கூடிய 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
அதேபோல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதிவரை நடைபெற இருப்பதாகவும்; இந்த தேர்வினை 7600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் மாணவ, மாணவிகள் 3169 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தவரையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை தமிழ்நாட்டில் 12,800 பள்ளிகளில் பயிலும் ரூ.10 லட்சம் மாணவ, மாணவிகள் 3,986 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் இரண்டாம் வாரத்தில் முடிவு பெறும். மாணவர்களுக்கான பாடத்திட்டம் இந்த ஆண்டு குறைப்பு கிடையாது. முழு பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒவ்வொரு தேர்வுக்கும் போதுமான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வேண்டும்' என அறிவுறுத்தினார்.
'காலமாற்றத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைப் பரீட்சார்த்த முறையில் மேற்கொண்டு வருகிறோம். அதன் பலன் 2 ஆண்டுகள் கழித்து தெரியவரும். பொதுத்தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டங்களும் நடத்தி முடிக்கப்படும்.
இதற்காக சனிக்கிழமைகளிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவதற்கும் அறிவுறுத்தியுள்ளோம். மேலும் மாணவர்களுக்கான தேர்வு முறைகளில் எந்தவிதமான மாற்றமும் தற்பொழுது கொண்டுவரப்படாது. உடனடியாக கொண்டு வந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஒன்றிய அரசின் இணை அமைச்சர் தேசியக்கல்விக்கொள்கையை அமல்படுத்தி வருவதாகக் கூறுவது தவறானதாகும். தேசியக்கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம். தமிழ்நாட்டிற்கான தனிக்கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் கருத்துகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படும்.
மேலும் தமிழ்நாடு அரசின் கல்விக்கொள்கைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய அரசு அலுவலர்களை ஒருபுறம் கண்காணித்து வருகிறோம். ஐஏஎஸ் அலுவலர்கள், தலைமைச்செயலாளர், முதலமைச்சர் ஆகியோரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமைச்சரிடம் குறையை சுட்டிக்காட்ட வந்த பெண்ணை பேசவிடாமல் தடுத்த எம்.பி.!