சென்னை: சென்னை, பெருங்களத்தூரில் இருந்து ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் நோக்கி நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. மிகவும் முக்கியமான அந்த சாலையில் விபத்துகளும், வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் அவ்வப்போது நடந்த வண்ணம் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பெருங்களத்தூர் மேம்பாலம் கடந்து இரும்பூலியூர் அருகே முன்னாள் சென்ற காரை, பின்னால் வந்த டெம்போ வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்களுக்கும், டெம்போ வேனில் வந்தவர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால், டெம்போ வேன் கார் மீது மோதியதால் காரின் பின்பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் சாலையில் காரை நிறுத்தி விட்டு இறங்கி வேன் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது, வேன் ஓட்டுநருக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதையடுத்து, வேன் ஓட்டுநருடன் சேர்ந்து, அதில் வந்திருந்த மற்ற நபர்கள் ஒன்று சேர்ந்து கார் ஓட்டுநரைத் தாக்கி உள்ளனர். கணவரை அடிப்பதைப் பார்த்த மனைவி ஓடிப் போய் தடுக்க முயன்ற போது மனைவி கண் முன்னே அவரது கணவரைச் சாலையில் தள்ளித் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காரில் வந்த உறவினர்கள் மற்றும் கார் ஓட்டுநரின் மனைவி ஆகியோர் போராடி மீட்டு காரில் ஏற்றினர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தெரிய வர, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தாம்பரம் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கார் ஓட்டுநரை கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இது போன்று காரில் வந்த கணவரை மனைவி கண் முன்னே தாக்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: 8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இந்திய விமானப்படை விமானம்; சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?