திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக, ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங், அவருக்கு உறுதுணையாக இருந்த காவலர்கள் அனைவரும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்பீர் சிங் மீது கொலை மிரட்டல், ஆயுதங்களால் சித்ரவதை செய்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் இடைக்கால அறிக்கை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றும்படி பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை அதிகாரியாக திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி பெண் ஆய்வாளர் உலகராணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, பல்வீர் சிங்கை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.