சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து அந்தமான் செல்லும் ஏா்இந்தியா விமானம் இன்று (அக்டோபர் 29) அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 181 பயணிகள், விமான ஊழியா்கள் ஐவர் என மொத்தம் 186 போ் இருந்தனா். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையறிந்த விமானி அவசரமாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட்டன. இதையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி, விமானம் காலை 6.15 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்த 186 பேரும் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா். பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனா். இதற்கிடையே பயணிகளை மாற்று விமானத்தில் அந்தமான் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.