சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் 3ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எண், எழுத்து ஆகியவற்றை கற்றுத் தந்துள்ளார்களா? என மாநிலக்கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 3வது நபர்களை கொண்டு ஆய்வு செய்ய உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் பெரிதும் பாதிக்கப்பட்டது. 2020 முதல் 2021 ஆம் கல்வியாண்டு வரையில் மாணவர்ளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. தொடக்கப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நேரடியாக 1,2 ம் வகுப்பு படிக்காமல் 3-ஆம் வகுப்பில் நேரடியாக சேர்க்கும் நிலமை ஏற்பட்டது.
அதனை தவிர்ப்பதற்காக இல்லம் தேடிக் கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு மாலை நேரங்களில் பாடம் கற்பிக்கப்பட்டன. ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கற்றுத் தருவதற்காக எண்ணும் எழுத்தும் என்றத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். எனினும் மாணவர்களிடம் கற்றலில் போதுமான முன்னேற்றம் இல்லை என்பதே பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா, 2022 - 2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின்படி 8 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பெற வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 2023 - 2024 ஆம் கல்வியாண்டு முதல் 4, 5 ஆம் வகுப்பிற்கும் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்றடைந்தது குறித்து மூன்றாம் நபர் மதிப்பீடு செய்யப்பட வேண்டி உள்ளது. இதற்காக பிட் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறுத் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு எழுதி உள்ள கடிதத்தில், “எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டமே கல்விக்கு ஒரு சோதனை தரும் திட்டமாகும். விளம்பரத்தில் வெற்றி அடைந்துள்ளது. உண்மைத்தன்மை ஆய்வில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த சோதனை திட்டத்திற்கு மூன்றாம் நபர் ஆய்வு தேவையா?. இதுதான் கல்வியாளர்களின் கருத்துப் பதிவாகும்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உயர்கல்வித்துறை, இயக்குநருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார்கள். அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிக்கும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மூன்றாம் நபர் மதிப்பீடு (Third party evaluation) செய்வதற்காக பயிற்சிக்கு அனுப்ப சொல்லி எழுதி இருக்கிறார்.
இந்த மாணவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும் ஆகஸ்ட் 28 முதல் 31 வரை மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கின்றனர். அவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பள்ளிகள் வாரியாக 1 முதல் 3 வகுப்பு படிக்கும் மாணவர்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புவர்.
எண்ணும் எழுத்தும் திட்ட பாதிப்புகளை பற்றி பலமுறை அதிகாரப்பூர்வமாக பதிவுகளையும் கோரிக்கை விண்ணப்பங்களையும் ஆசிரியர் இயக்கங்கள் அனுப்பியும், விவாதித்த பிறகும் நிதி ஒதுக்கீட்டினை செலவு செய்வதில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களின் கல்வி நலனில் ஆசிரியர்களின் நலனில் SCERT இயக்ககம் அக்கறை கட்டவில்லையே!
இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி முடித்து 25, 30 ஆண்டுகளாக பாடம் நடத்தி வருகிற ஆசிரியர்களுக்கு பி.எட் படித்துவரும் முதலாம் ஆண்டு மாணவர்களும், இரண்டாம் ஆண்டு மாணவர்களும் மூன்று நாட்கள் மட்டும் பயிற்சி பெற்று மூன்றாம் நபர் மதிப்பீடு செய்வது என்பது சரியான சிந்திக்கத் தெரிந்த செயல்பாடாகுமா?.
எண்ணும் எழுத்தும் திட்டமே தோல்வி அடைந்த திட்டம் என்று நாங்கள் ஆதாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளதை நாங்கள் இன்று வரை மாணவர்களின் கல்வி நலன் கருதி எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறோம்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தினை ஆய்வு செய்ய இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் இத்தனை பேர் சோதனை மேல் சோதனை செய்து வருகின்றனர்.
இவர்கள் செய்யும் சோதனையில், ஆய்வில் நம்பகத்தன்மை இல்லாமல் கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்களை மூன்றாம் நபர் மதிப்பீடு (Third party evaluation) செய்ய சொல்லி இருக்கிறீர்கள். ஆசிரியர் சமுதாயத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதற்கு ஒரு எல்லையே இல்லையா?.
நாடாளுமன்ற தேர்தலில் ஆசிரியர்களை கொந்தளிக்கச் செய்து ஆளுங்கட்சிக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அவற்றையெல்லாம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது என்று பகிரங்கமாகவே வெளிப்படுத்தி வருகிறோம். ஆதாரப்பூர்வமாக பட்டியலிட்டு வெளியிடவும் தயாராக உள்ளோம்.
எதனையும் கண்டுகொள்ள மாட்டார் கல்வி அமைச்சர் என்ற அசாத்திய தைரியம் இருப்பதனால் துறையில் இப்படிப்பட்ட செயல்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மூன்றாம் நபர் மதிப்பீடு (Third party evaluation) என்றால் என்ன என்பதை முதலில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். நாங்கள் நடத்திய பாடத்தை பி.எட் படிக்கும் மாணவர்களை ஆய்வு செய்ய அனுமதிக்க மாட்டோம்.
பி.எட் படிக்கும் மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கும் என்ன தொடர்பு என்பதை விளக்க முடியுமா?. எவ்வளவு அவமானத்தை தந்தாலும் ஆசிரியர் சமுதாயமும் ஆசிரியர் இயக்கத் தலைவர்களும் பொறுத்துக் கொள்ளக் கூடிய பக்குவம் பெற்று விட்டதாக எண்ணுகிறீர்களா?. சரியான விளக்கத்தினை தெரியப்படுத்தவில்லை என்றால் பள்ளிக்கு பார்வைக்கு வருபவர்களை நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்பதை திட்டவட்டமாக வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் (டிட்டோஜாக்) கருத்து ஒருமித்து ஒத்த நிலைபாட்டில்தான் உள்ளோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மௌனம் காத்தது போதும் கல்வித்துறையை காப்பாற்றுங்கள். ஆசிரியர் சமுதாயத்தை சித்திரவதை செய்வதற்கும் அவமானப்படுத்துவதற்கும் தொடர்ந்து அனுமதிக்க வேண்டாம்.
எண்ணும் எழுத்தும் மூன்றாவது நபர் மதிப்பீடு (Third party evaluation) செய்யும் திட்டத்தினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனிக்கவனம் மேற்கொண்டு ரத்து செய்திட வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிறந்த ஆசிரியருக்கான நல்லாசிரியர் தேசிய விருது - தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு!