இது தொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி ஆகியவற்றின் வளாகத்தில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 3 ந் தேதி பள்ளி தொடங்குகிறது. இந்த அங்கன்வாடி மையங்கள் வளாகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளை முன்கூட்டியே அந்தெந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் சமூகநலத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தளவாட வசதி, வகுப்பறை வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்த வேண்டும்.
மாணவர் சேர்க்கை நடைபெறுவது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரப்பலகை வைக்க வேண்டும். பள்ளித் திறக்கும் அன்று இந்த பள்ளிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் பணியில் சேர வேண்டும். இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
இந்தாண்டு முன்னோடி திட்டமாக செயல்படுத்தபடுவதால், மாணவர் சேர்க்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.