இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 27ம் தேதி முதல் நடைபெற உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதிப்பீட்டு முகாம்களில் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு அறையில் ஒரு முதன்மை தேர்வாளர் (முதுநிலை ஆசிரியர்கள்), ஒரு கூர்ந்தாய்வாளர், ஆறு உதவி தேர்வர்கள் என 8 நபர்கள் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளி பின்பற்றப்படும் பொழுது முதன்மை கல்வி அலுவலர்களால் கூடுதலாக தேவைப்படும் அறைகள் கணக்கிடப்பட்டு மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் மதிப்பீட்டு முகாம் பணிகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக வேறு பள்ளிகளில் மதிப்பீட்டு பணிகள் நடைபெறும்போது அந்த இடங்களில் பணி நடைபெறும் நாட்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே தெரிந்து எடுக்கப்பட்ட மதிப்பீட்டு மையங்கள் முதன்மை மதிப்பீடு மையமாகவும், தற்போது கூடுதலாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பள்ளிகள் துணை மதிப்பீட்டு மையங்களாக செயல்பட வேண்டும்.
துணை மதிப்பீட்டு மையங்களுக்கு அரசு வாகனத்தின் மூலம் மட்டுமே விடைத்தாள்கள் எடுத்துச் செல்ல வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்பார்வையிட தொடர்பு அலுவலராக மூத்த தலைமை ஆசிரியர் அல்லது முதுநிலை ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீட்டு பணி நடைபெறும் நாள்களில் மையங்களில் உள்ள மேஜை நாற்காலி இருக்கைகள் என அனைத்து இடங்களிலும் பணி துவங்குவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிருமி நாசினி தெளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மையத்திற்கு வரும்போது தங்களது கைகளை சோப்பு அல்லது சனிடைசர் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து பணியாற்றவேண்டும்". எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பார்க்க: பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் மூலம் வீடு வாங்குவோர் பயனடைவர் - மத்திய அமைச்சர்