இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறுவதற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் அரசு சார்பில் மாதந்தோறும் ஊதியத்தில் இருந்து ரூபாய் 180 பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சில தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில். கரோனாவால் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை அளிக்க ஆசிரியர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கின்றன. இதை செலுத்த முடியாமல் ஏராளமான ஆசிரியர்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடம் சில தனியார் மருத்துவமனைகள் 7 லட்ச ரூபாய் அதிகமாக வசூலிக்கின்றன. இதை செலுத்த முடியாத பல ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் பல ஆசிரியர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம், அதற்கான செலவுகளை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். இந்நிலையில், ஆசிரியர்களுக்கு அது பொருந்தாது என தனியார் மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி விடுகின்றன.
ஒவ்வொரு ஆசிரியருக்கும், அரசு ஊழியருக்கும் இன்சூரன்ஸ் தொகையாக மாதந்தோறும் ரூபாய் 180 பிடித்தம் செய்வதால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை போல ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கான தொகையை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும்’என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 படுக்கைகள்' - அமைச்சர் சு.முத்துசாமி!