சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வாளகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமாெழி தலைமையில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 75 சங்கங்களின் நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டம் குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சுரேஷ் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் சங்கங்களை அழைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம். அரசுப் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். எனவே மாணவர்களுக்கு விலையில்லாமல் உடற்கல்வி பாடப்புத்தகம், விளையாட்டு உபகரணங்கள், விலையில்லா சீருடைகள் வழங்க வேண்டும்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் போது பள்ளியின் சீருடையில் செல்கின்றனர். அதனை தவிர்க்கவும், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளவும் தனியாக சீருடை வழங்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களின் பெயரை மாற்றம் செய்து இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி, பட்டதாரி ஆசிரியர் (உடற்கல்வி), முதுகலை ஆசிரியர் (உடற்கல்வி) என அரசாணை வெளியிட வேண்டும்.
அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவதில் உள்ள சிக்கலை களைய வேண்டும். தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப்போட்டிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 54 வகையான விளையாட்டுகளும் குறுவட்டம், மாவட்டம், மாநில அளவில் நடத்திட வேண்டும். பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கான நிதியை அதிகரித்து தர வேண்டும்" என தொிவித்தார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, "ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் தங்களின் கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வழங்கி உள்ளோம். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான பங்களிப்பு ஒய்வூதியத்திட்டம் ரத்து செய்து பழைய ஒய்வூதியத் திட்டத்தை வழங்குவது, நிறுத்தி வைத்துள்ள ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பை அனுமதிக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையில் குறைந்தப் பட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான புதிய அரசாணை வெளியிட வேண்டும். முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாளை கணக்கில் கொண்டு அனைத்து பதவி உயர்வுகளும் வழங்கப்பட வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லாமல் மீண்டும் பணிக்கு போட்டித் தேர்வு வைக்கும் போது அதற்கான எதிர்ப்பை தெரிவித்து கடந்த ஆட்சியிலேயே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளரிடம் ரத்து செய்ய வேண்டும் என கூறினோம். ஆனால் ஆந்திரமாநிலத்தில் இருக்கிறது என கூறினர். ஆசிரியர் பணிக்கு மீண்டும் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்றுத்தான் . திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பாேட்டித் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜெயதேவன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூறும்போது, “பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் பாடப்புத்தகம் வழங்க வேண்டும். அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி அனைத்திலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் விளையாட்டு உபகரணங்களை வாங்கி தர வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளியில் இருந்து விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் தேசிய அளிவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளவார்கள். மேலும், மாணவர்களை வகுப்பறையில் மன அழுத்ததுடன் வைக்காமல் வெளியில் விளையாட அனுமதிக்கும் வகையில் உடற்கல்விக்குத் தேவையானவற்றை செய்துதர வேண்டும். மேலும், உடற்கல்வி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்னையையும் அரசு தீர்த்து வைக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று ஆளுநர் கூறுவது அறியாமை" - அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம்!