சென்னை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து, மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத்தேர்வுகள் துறை வெளியிட்டது.
அந்த வகையில், தேர்வு முடிவு வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று வழங்கப்பட்ட மதிப்பெண்களை பரிசோதித்தனர். வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல், ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும், குறைத்து மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்கி உள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, செய்முறைத்தேர்வு 30 மதிப்பெண்கள் என 87 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவரின் விடைத்தாளை சோதித்தபோது 67 மதிப்பெண்களும், 30 செய்முறை தேர்வு மதிப்பெண்களை கூட்டினால் அந்த மாணவர் 97 மதிப்பெண்களை வேதியியல் பாடத்தில் பெற்றிருக்க வேண்டும். ஆனால், விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள், அதன்பின்னர் பரிசோதித்த விடைத்தாள் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நடைபெற்றுள்ள தவறை உணராமல், தவறான மதிப்பெண்களை வழங்கியுள்ளனர்.
அதேபோல இயற்பியல் பாடத்தில் மாணவர் ஒருவர் 72 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் விடைத்தாள் பெற்று சோதித்த பிறகு அந்த மாணவர் 82 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதேபோல கணினி அறிவியல் பாடத்தில் 85 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் விடைத்தாள்களைப் பெற்று மதிப்பெண்களை பரிசோதித்ததில் அவர் தற்போது 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்திய பிறகு சரியாக திருப்பப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க முதல்நிலை மதிப்பீட்டாளர், இரண்டாம்நிலை மதிப்பீட்டாளர் , முதன்மை மதிப்பீட்டாளர் என ஆசிரியர்கள் தேர்வுத்துறையால் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை தவறாக பதிவுசெய்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வில் இவ்வாறு மதிப்பெண்களை முறையாக வழங்க தவறுகின்றபோது பொறியியல், வேளாண் படிப்புகள், கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகள், கலை அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட அனைத்திலும் இந்த மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரி இடம் கிடைக்காமல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதுபோன்று மதிப்பெண்களை சரியாக கூட்டிப் போடாமல் மேலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.
இதையும் படிங்க: '105 சவரன் நகை, டொயோட்டோ கார் வரதட்சணை' - ஐஐடியில் பேராசிரியர் பணி எனக்கூறி டாக்டரை மணந்த நபர் அதிரடி கைது!