சென்னை: பூந்தமல்லியில் உள்ள கரையாஞ்சாவடி ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளியில் உதவியாளராக பணிபுரியும் ஆனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனது சம்பளம் மற்றும் அனைத்துப் பணிச் சலுகைகளையும் நிறுத்தி வைக்க திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் (டிஇஓ) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் தனக்கு வழங்கப்பட்ட இன்கிரிமெண்ட்களை திரும்பப் பெற வேண்டும், வருடாந்திர இன்கிரிமெண்ட் மற்றும் மகப்பேறு விடுப்பு சலுகைகளை வழங்க கூடாது போன்ற மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் (ஓய்வு பெறும் வரை) முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை சட்டம், 2009இன் படி TET தகுதிக்கான பரிந்துரை, சிறுபான்மை நிறுவனங்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. மனுதாரர் பணிபுரிந்த பள்ளி, சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாகும். எனவே TET தேர்வு அந்த கல்வி நிறுவனத்திற்கு பொருந்தாது என குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி 2017ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன் மனுதாரருக்கு சேர வேண்டிய வருடாந்திர ஊதிய உயர்வுகளை உடனே திரும்ப வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பணப்பலன்களை நிறுத்தி வைத்த உத்தரவால் மனுதாரருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சட்டவிரோதமாக கருதி, 4 வாரங்களில் அவைகளை தீர்க்க அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'பேரறிவாளனை விடுவிப்போம்'- உச்ச நீதிமன்றம் அதிரடி!