சென்னை: தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும் திட்டம் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஆடல் பாடல் மூலம் கற்பிக்கும் வகையில் பயிற்சியும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மாணவர்களுக்கு பறை இசைக்கருவி வாசிக்க கற்றுத் தந்தனர். அதற்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநில அளவில் மதுரையில் பயிற்றுநர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சியின்போது ஆதிவாசிகள் போல் வேடம் அணிந்து ஆட வேண்டும் எனக் கூறி ஆட்டம் போட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
இது குறித்து ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை வெளியிட்டுள்ள தகவலில், 'எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்திற்கான பயிற்சியில் ஆதிவாசிகளின் தோற்றத்தில் ஆசிரியர்கள் ஆட வேண்டுமா? ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியினை நடத்தி விட்டனர். அச்சடித்த புத்தகத்தையே கையில் எடுக்காமல் நடத்தினர். வாசிப்புத் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் பேச வேண்டுமானால் இதுதான் உண்மை.
கல்வியாளர்கள், எங்களைப் போன்ற மூத்த ஆசிரியர்கள் அப்போதே கருத்து தெரிவித்திருந்தோம். நான்கு மற்றும் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டாம். அப்படி நடைமுறைப்படுத்தினால் ஆறாம் வகுப்பிற்குச் செல்லும்போது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு செய்து நாங்கள் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனாலும் பிடிவாதமாக நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு விட்டது.
அதற்கான பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மாநில அளவில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சியில் பெண் ஆசிரியர்களும், ஆண் ஆசிரியர்களும் இலை தழைகளை உடுத்திக் கொண்டு ஆதிவாசிகளைப் போல், 'ஜிம் ஜிம் ஜிம் ஜிம்ப்பா..ஜிம் ஜிம் ஜிம் ஜிம்ப்பா..' என்று கத்திக் கொண்டு நடனம் ஆடுவதைப் பார்த்து நெஞ்சம் பதை பதைக்கிறது.
எழுத்து அறிவித்தவன் இறைவன் என்று இன்றும் போற்றி வணங்குகிறார்கள். ஆனால், ஆசிரியர்களை ஆதிவாசிகள் போல் நடனமாட செய்துள்ளார்கள். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களை ஆட வைத்து வீடியோ எடுப்பதையும் பார்க்கிறோம்.
நல்ல வேளை ஆதிவாசிகளுக்கு அந்த காலத்தில் உடைகள் இல்லை. இலைகள், மரப்பட்டைகள், விலங்கின் தோல் மட்டும்தான் உடுத்தி வந்தார்கள். எங்கள் ஆசிரியர்களின் மானம் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை எண்ணி ஆறுதலுறுகிறோம்.
வகுப்பறையில் யாராவது ஒரு மாணவன் ஆதிவாசிகள் அந்தக் காலத்தில் இப்படித்தான் ஆடை உடுத்தி இருந்தார்களா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஒரு பாடத்தை நடத்தும்போது ஆர்வமூட்டுவதற்காக இது போன்று பல்வேறு தோற்றங்களில் ஆட வைத்துப் பார்ப்பது தான் SCERTக்கு அழகா?
இப்படி பல்வேறு தோற்றங்களில் ஆசிரியர்கள் ஆடுவதால் மாணவர்களுடைய வாசிப்புத் திறன் மேம்பட்டு விடுமா? அந்த நடனத்தில் ஆடக்கூடிய ஆசிரியை ஒருவர் தானாகவே எழுந்து உட்கார முடியாத நிலையில் இருக்கக்கூடியவரையும் ஆடச் செய்து பார்க்கிறார்கள்.
இனிமேல் மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சிக்கு ஆசிரியர்கள் இலை தழைகளுடன் தான் வர வேண்டுமா? இந்தப் பயிற்சியை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கின்ற பொழுது அவர்களும் இலை, தழைகளுடன் மேக்கப் செய்து ஆசிரியரோடு சேர்ந்து ஆட வேண்டுமா? இதுதான் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியா? அடுத்து மலைவாசிகள் பாட அறிமுகத்திற்கு குறவன், குறத்தி போல் வேடமணிந்து டப்பாங் கூத்து நடனம் ஆட வேண்டுமா? இதையெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கே மனம் வேதனையுறுகிறது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட இருக்கிறது. பாடப்புத்தகங்கள், நலத்திட்டங்கள் பள்ளிகளில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. ஆனால், வகுப்பறையில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. முதலில் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யுங்கள். ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் நாங்கள் தெரிவிப்பதெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகளால் கற்றல் கற்பித்தல் திறன் மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
திராவிட மாடல் ஆட்சியில் ஆறாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள். ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்திற்கும் அவர்கள் படித்து வந்த எண்ணும் எழுத்துக்கும் தொடர்பே இல்லாமல் பள்ளியை விட்டு விலகும் சூழல் கூட ஏற்படலாம். நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். அந்த நிதி ஒதுக்கீடுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனில் பாதிப்பினை ஏற்படுத்த வேண்டாம்' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இயற்கை முறை விவசாயத்தை மேம்படுத்த நாற்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்!