தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. எல்லா மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறை, நோயாளிகளின் விவரங்களைச் சேகரிப்பது போன்ற பணிகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக, மருத்துவமனையில் வேலைப்பளு அதிகளவில் கூடியுள்ளது. தேவையான அளவு மருத்துவர்களை நியமனம் செய்தாலும், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கும் நிலை ஏற்படுகிறது.
தற்போது கரோனா குறித்து கணக்கெடுக்கும் பணி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அறையின் 24 மணிநேர சேவைக்காக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியர்கள் மக்கள் சேவையாற்றுவதற்குத் தயராக இருக்கும் நிலையில், தங்களுக்கான பாதுகாப்பினை உறுதிச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் கூறும்போது, ஆசிரியர்களுக்கும், சமூகப் பொறுப்பும், சமூகப் பணியும் இருக்கிறது. பல்வேறு சூழ்நிலையில் சமூகத்துடன் சேர்ந்து பயணிப்பவர்கள் ஆசிரியர்கள். இதற்கு முன்னரும் கரோனா பணி, புயல், நிவாரணப் பணியில் தங்களை விருப்பத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.
ஆனால் அதே நேரத்தில் இணை நோய் இல்லாத, விருப்பம் உள்ள ஆசிரியர்களையும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் பணிக்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் அதிகளவில் கரோனா தொற்றால் பாதிக்கும் சூழ்நிலையில், பள்ளிகள் இல்லாமல், மாணவர்கள் இல்லாமல், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் இல்லாத நிலை நிலவுகிறது.
ஆனால், பல்வேறு இணை நோய்களுடன் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்தி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் இணை நோய் பாதிப்பு இல்லாதவர்களை ஈடுபடுத்திக் கொள்வதில், எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என கூறினார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தாஸ் கூறும்போது, தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலை மோசமாக தாக்கி வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறுத் துறையினர் கடமையை செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களின் பள்ளிப் பணியில் கடமையை செய்து வருகின்றனர்.
அதேநேரத்தில் கரோனாப் பணியில் கடந்தக் காலத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய செயலாகும்.
ஆசிரியர்கள் பள்ளியின் வேலை இறுதி நாளில் தேர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் கோடை விடுமுறையை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். கடந்த காலத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நோய் தொற்று ஏற்பட்டு இறந்து இருக்கின்றனர்.
அவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்கவில்லை. அரசு அறிவித்த நிவாரணம் கிடைக்கவில்லை. ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கரோனா பணிக்குத் தன்னார்வத்துடன் வரும் ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.