பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நவம்பர் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு முழுவதும் இணையதளம் மூலம் மட்டுமே நடத்தப்படவுள்ளது.
நவம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "11ஆம் தேதி முதல் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வழக்குப் போட்டவர்களின் வழக்கு எண்ணை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்திலும் நடைபெறும் கலந்தாய்வு முடிக்கபட்டால்தான், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்க முடியும். எனவே மாவட்ட அளவிலான ஆன்லைன் கலந்தாய்வு முடிக்கப்பட்டு, அதன் விபரத்தினை தவறாமல் தெரிவிக்க வேண்டும்.
கலந்தாய்வின் போது காலதாமதம், தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுவதால் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் மின் தடை ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும். ஒருவர் ஒரு காலிபணியிடத்தினை தேர்வு செய்தவுடன் அவர் ஏற்கனவே பணிபுரிந்த இடம் காலி பணியிடமாக காண்பிக்கப்படும். அந்த காலி பணியிடத்தையும் கலந்தாய்வில் மற்றொருவர் எடுத்துக் கொள்ளலாம்.
பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தவறாது முழுநேரமும் இருத்தல் வேண்டும். வேறு பணிக்காக கலந்தாய்வு நடைபெறும் இடத்தை விட்டுச் செல்வதை ஏற்க இயலாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
‘ரஜினியின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ - சரத்குமார் தடாலடி