தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் 10 ஆண்டிற்கு முன்பு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்திவந்தனர். இதனால் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அதிக அளவில் இருந்தது. எனவே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பட்டப்படிப்பு அல்லது ஆசிரியர் பயிற்சியில் ஆர்வமுடன் சேர்ந்து வந்தனர்.
இந்நிலையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பாடம் நடத்த முடியும் என அரசு உத்தரவிட்டது. இதனால் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. படிப்பினை முடித்த பின்னர் வேலை கிடைக்காததால் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மாணவர்கள் இன்றி அளிக்கப்படும் சம்பளம் வீண் செலவாக அரசு கருதியது. இதனையடுத்து அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 30 விழுக்காட்டிற்கு குறைவாக சேர்க்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவித்தது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில் இந்த ஆண்டு சேர்க்கை தொடங்குவதற்கு முன்பே 40 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட உள்ளது.
இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அனுமதியை பெற்றவுடன் மூடுவதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி; பயிற்சி நிறுவனம் அனுமதி அளிக்கும் என தெரிவித்துள்ளனர்.