தமிழ்நாட்டில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று ஆகிய தேர்வில் 2 ஆயிரத்து 144 காலிபணியிடங்களுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.
இதில், முதுகலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் தேர்வு வரும் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தேர்வில், அதிகபட்சமாக தமிழ் பாடத்தை 33 ஆயிரத்து 702 பேரும், ஆங்கில பாடத்தை 32 ஆயிரத்து 387 பேரும், வேதியியல் பாடத்தை 14 ஆயிரத்து 502 பேரும். வணிகவியல் 14 ஆயிரத்து 862 பேரும், இயற்பியல் பாடத்தை 14 ஆயிரத்து 372 பேரும், இந்திய கலசாரத் தேர்வினை 11 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.
இந்நிலையில், ஜூன் மாதம் முதன்முறையாக நடைபெற்ற பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வின் போது, தேர்வு மையத்தில் தேர்வர்கள் சிலர் தவறான நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
எனவே இத்தேர்வில் அவற்றை தவிர்க்கும் நோக்குடன், பதற்றமான மாவட்டங்களான கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில், கூடுதலாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.