சென்னை: மாண்டேஸ் புயல் மற்றும் மழை பாதிப்பில் இருந்து பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்க டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சம்மேளன சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று முன்தினம் வங்கக் கடலில் உருவான மாண்டேஸ் புயல் தமிழகம் மற்றும் அதன் எல்லையோர பகுதிகளில் கரையை கடக்க இருப்பதை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றிற்கு விடுமுறை அளித்துள்ளது.
மேலும் புயல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவிப்பு செய்துள்ள நிலையில் , தமிழகத்தில் இயங்கும் சுமார் 5,400 டாஸ்மாக் கடைகள் திறந்து செயல்பட்டால் , குடிமகன்கள் மதுபானங்கள் வாங்க பொதுவெளியில் வரும் சூழல் ஏற்படும் அது மட்டும் இன்றி கடையில் பணிபுரியும் ஊழியர்கள் இரவு கடைப்பணி முடித்து சுமார் 12 மணி அளவில் வீடு திரும்ப வேண்டி உள்ள சூழ்நிலையில் அந்த நேரத்தில் மாண்டேஸ் புயல் கரை கடக்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது எனவே அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் பொது மக்களையும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களையும் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள (புயல் மழை பாதிக்கப்படவுள்ள) மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டுமென சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: நாளை(டிச.10) பள்ளிகளுக்கு விடுமுறை?