இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு என்பது ஓர் அடக்குமுறை எந்திரம். ஒருசிலர் பெரும்பான்மை மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கத்தான் மக்கள் மீது அடக்குமுறை. இதற்கு அந்த உழைக்கும் மக்கள் உயிர் வாழ்ந்தால்தானே முடியும்; எனவே அதற்காகவேனும் வேண்டியதைச் செய்யும் அரசுகள்.
ஆனால் மோடி அரசோ முற்றிலும் வேறுபட்டது. இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு மட்டுமே. உழைக்கும் மக்கள் அதற்குப் பொருட்டே அல்ல. இதற்கு அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளே சாட்சி. இப்பொது இந்த கரோனா நெருக்கடியிலும் படுகொடூரமான பாதக நடவடிக்கை ஒன்றை எடுத்திருக்கிறார். அதாவது, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 20) முதல் கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த கரோனா தருணத்தில் அத்தியாவசியப் பொருள்களுக்குத்தான் தேவை அதிகம். லாரிகளும் அந்தப் பொருள்களைத்தான் ஏற்றிச் செல்லும். அப்படிச் செல்கையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஆயிரக்கணக்கான சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் கட்ட வேண்டும் என்றால், அந்தச் சுமை அவை ஏற்றிச் செல்லும் பொருளின் மீதுதானே ஏறும். அப்போது பொருள்களின் விலை தாறுமாறாகாமல் வேறென்ன செய்யும்?
இதனால் பாதிக்கப்படுபவர் சோற்றுக்கின்றி வாடும் சாதாரண மக்கள் மட்டுமல்ல. சிறு வியாபாரிகள், லாரி ஓனர்கள், லாரிகளில் வேலை செய்யும் தொழிளாளர்கள் எல்லோரும்தான். இதனால் சமூக விலகல் கலகலத்து சமூகம் ஒன்றிணைந்து இதனை எதிர்க்கும் சூழல் உருவாகி, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படக் கூடும்.
எனவே, கரோனா நெருக்கடி தீரும்வரை சுங்கக் கட்டண வசூலைக் கைவிட வேண்டும். இல்லையென்றால், சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றக் கோரி, மிகப் பெரிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம் எனக் கூறிக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசும் இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மருத்துவர்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' - முதலமைச்சர் பழனிச்சாமி