கரோனா தொற்றுப்பரவல் தடுப்பு, உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த 318 தமிழர்கள் தமாமிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானம் மூலமாக நேற்றிரவு (ஆகஸ்ட் 15) சென்னை வந்தடைந்தனர். சவுதி அரேபியால் தனியாா் தொழிற்சாலைகளில் பணியாற்றிவந்த இவர்களை அந்நிறுவனங்களே தாயகம் அழைத்துவர இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.
இதையடுத்து, வந்தே பாரத் மிஷனின் ஐந்தாம் கட்ட விமான சேவையின் ஒரு விமானம் மூலமாக அவர்கள் தமிழ்நாடு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவா்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நிறைவடைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு சென்னை நகர விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இவா்கள் தங்கியுள்ள விடுதிகளில் தனியாா் மருத்துவக் குழுவினா் மாநகராட்சி அலுவலர்கள் மேற்பாா்வையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்துவாா்கள். அதேபோல, அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 116 பேரும், சாா்ஜாவிலிருந்து 176 பேரும் இரண்டு தனி சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தனர்.அவா்களுக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டன.
அவா்களில் அரசின் விலையில்லா தங்குமிடங்களுக்கு 147 பேரும், கட்டணம் செலுத்தி தங்கும் இடங்களான விடுதிகளுக்கு 143 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசின் சிறப்பு அனுமதி பெற்று தங்களது வீடுகளில் தனிமைப்படுத்த இருவர் அனுமதிக்கப்பட்டனர்.