சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 23) பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கக்கூடாது எனவும், தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் வரும் கல்லூரிகளுக்கு இளங்கலை (UG), முதுகலை (PG) மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த யுஜிசி (UGC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது" என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு கூடாது என்பதே அரசின் எண்ணம் என்று தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை முதலமைச்சர் தீவிரமாக எதிர்ப்பார். கலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகங்களின் சீரமைப்பை முதலமைச்சர் நேரடியாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு முழு முயற்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாமக உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்