இந்தத் தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருமானத்துக்கு வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவின்றி பசியால் வாடுகின்றனர். எனவே அரசு இவர்களின் நலன் கருதி உடனே நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்டோ ட்ரைவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றுவோர் உள்ளிட்ட 17 வாரியங்கள் தொழிலாளர் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு சுமார் 27. 4 லட்சம் தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலார்களாக இருக்கின்றனர் எனப் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
கடந்த கரோனா முதல் அலையின் போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சுமார் 33 லட்சம் தொழிலார்களுக்கு தலா 2, 000 ரூபாயும், நியாய விலைக்கடைகளில் 15 கிலோ அரிசி, பருப்பும் இலவசமாக வழங்க ஆணையிட்டது.
தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு பெரும்பாலான துறைகளுக்கு குறிப்பாக முன்களப் பணியாளர்களுக்கு சில சலுகைகளையும் நிதி உதவிகளையும் அளித்துள்ளது. ஆனால் அமைப்புச்சாரா தொழிலாளர்களை சிறிதும் கண்டுகொள்ளவில்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தொழிலாளர்கள் தங்களுக்கான வாரியங்களில் பதிவு செய்தாலும், அதை முறையாக புதுப்பிப்பது இல்லை. எனவே கணக்கெடுப்பதில் பல சிக்கல்கள் நிலவுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் முன்னாள் தலைவர் பொன்குமார் நம்மிடம் பேசுகையில், "இந்தப் பிரச்னை குறித்து தொழிலாளர் நலத்துத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். அவரும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நல்ல முடிவை கூறுவதாக உறுதியளித்துள்ளார். தற்போது கட்டுமான தொழில் வாரியத்தில் 75 லட்சம் நபர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மேலும், கட்டுமான தொழில்கள் மூலம் ரூ.3, 800 கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது" என்றார்.
அரசு புள்ளி விபரத்தில் 17 வாரியங்களின் கீழ் மொத்தமாக 27. 4 லட்சம் தொழிலாளர்கலள்தான் பதிவு செய்திருக்கின்றனர் என்ற கேள்விக்கு, "இதுகுறித்து தொழிலாளர் துறை தரவை சேகரிப்பதற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. கூடிய விரைவில் அரசு தொழிலாளர்களுக்கு சலுகை, நிதி உதவிக்கான அரசாணையை வெளியிடும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
அ. சௌந்தரராஜன், தமிழ் மாநில குழு (சிஐடியு) கூறுகையில், "ஒவ்வொரு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் தலா 7,500 ரூபாய் வழங்கிட கோரிக்கை வைத்துள்ளோம். கரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அமைப்பு சாரா தொழிலார்கள் எந்த வித வருமானமுமின்றி தவித்துவருகின்றனர். இதனை அரசு பரிசீலித்து உடனடியாக நிதி உதவியை அளிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். பாலசுப்ரமணியன் நம்மிடம் கூறுகையில், "ஆட்டோ ஓட்டுனர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும். அரசு வெவ்வேறு துறைக்கு பல திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் அமைப்பு சாரா தொழிலார்களையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் ஊரடங்கினால் கடந்த ஆண்டு வேலையில்லாமல் சிலர் தற்கொலை செய்துகொண்டதைபோல இந்த வருடமும் தொழிலாளர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மாநில, ஒன்றிய அரசுகளை பாராட்டிய சென்னை உயர் நீதிமன்றம்