ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் இன்றுமுதல் (பிப். 25) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசின் சமரச பேச்சுவார்த்தைக்கு அவர்கள் உடன்படவில்லை.
இந்நிலையில், அரசின் அனைத்துப் பேருந்துகளும் இன்று (பிப். 25) இயங்கும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
"இதுவரை இரண்டு முறை போக்குவரத்து ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடமாக ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது.
தற்போது பேச்சுவார்த்தை காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கருத்தில்கொண்டு வேலைநிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என வேண்டுகோள்விடுக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.