இது குறித்து சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த திட்டத்தில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்தும் (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்திலிருந்து), தாம்பரத்திலிருந்தும் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச்செல்ல குளிர் சாதனப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இப்பேருந்தின் கட்டணமாக பெரியவர்களுக்கு இரண்டாயிரத்து நூறு ரூபாயும், ஆறு முதல் 12 வயதுடைய சிறியவர்களுக்கு ஆயிரத்து ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி பகுதியிலும் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளது. இது செப்டம்பர் மாதம் முதல் நாள் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்தும் (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்திலிருந்து), தாம்பரத்திலிருந்தும் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லவும் குளிர் சாதனப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்தின் கட்டணமாக பெரியவர்களுக்கு இரண்டாயிரத்து அறுநூறு ரூபாயும், சிறியவர்களுக்கு ஆயிரத்து முந்நூறு ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை சுற்றுலாத்துறையின் இணையதள முகவரியான www.tamilnadutourism.org யில் தெரிந்துகொள்ளலாம். இணையதள முன்பதிவினை www.ttdconline.com என்ற முகவரியிலும், கைபேசி முன்பதிவினை www.mttdonline.com என்ற முகவரியிலும் பதிவு செய்துகொள்ளலாம்.