தமிழ்நாடு கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் இன்று (அக்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளது என்பது குறித்த பதிவேடுகள் இல்லாததால் நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
மேலும், கோயில்களில் புராதன நகைகள் எவை என்பது குறித்தும், கோயிலுக்கு தேவையான நகைகள் எது என்பது குறித்தும் கண்டறிய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 38 கோயில்களில் 2,137 கிலோ தங்கத்தை உருக்கி தங்க கட்டிகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும், நகைகளை தணிக்கை செய்யாமல் உருக்கக்கூடாது என வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 1977 ஆம் ஆண்டு முதல் கோயில் நகைகள் உருக்கப்பட்டு வருவதாகவும், ஐந்து லட்சம் கிலோ நகைகள் ஏற்கனவே உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ததன் மூலம் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வட்டி வருவாய் கிடைப்பதாக தெரிவித்தார்.
மேலும் நகைகளை தணிக்கை செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக செப்டம்பர் 9 ஆம் தேதி இயற்றப்பட்ட அரசாணையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அரசாணை குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதியளித்த நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு எடுக்கட்டும் - சென்னை உயர் நீதிமன்றம்