சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகைதந்திருந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் பேட்டியளித்தார். அப்போது, “முதலாவதாக தமிழ்நாட்டில் பெருவாரியான ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தொடங்கினார்.
பல்வேறு தீர்மானங்கள்
அதன்பின் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், "அடுத்து எங்களது வாழ்வாதார கோரிக்கை ஆசிரியர்களுக்கான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்.
எங்களது நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்து இருக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தபோதும்கூட, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5.50 லட்சம் ஆசிரியர்களின் பிரச்சினை என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் கருத்தில்கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தச் செயற்குழு வாயிலாக நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
2004 முதல் 2006 வரை நாங்கள் சேர்ந்த தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாகச் சேர்க்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசாணை 101-ஆல் பள்ளிக் கல்வித் துறை சீரழிந்துகொண்டிருக்கிறது.
அரசாணைத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்
தமிழ்நாடு முதலமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் அந்த அரசாணைத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். மீண்டும் பழைய முறையே கொண்டுவரப்பட வேண்டும். கூடவே ஆணையர் பணியிடத்தை ரத்துசெய்ய வேண்டும்.
ரத்துசெய்யப்பட்ட இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். சிறப்பு ஆசிரியர்கள், தொழிற் கல்வி ஆசிரியர்கள் 171 பேர் உள்ளிட்ட தற்காலிகப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்குப் பணி பாதுகாப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டும். நீட் தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தை 12ஆம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த வேண்டும்“ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை- நாராயணசாமி