ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கைகளை உடனே ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்ந்த சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கோடு, பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றை பறிக்கும் வண்ணம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயல்கள், மிகவும் வருத்தமளிக்கக் கூடியதாகவும் கண்டனத்துக்கு உரியதாகவும் உள்ளன. இது உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கருதுகிறது.
பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் உள்ள இடர்பாடுகள், குளறுபடிகள் குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.
மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றையும் வருகைப் பதிவையும் வைத்து தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு முறைகேடுகள் நடைபெற வழிவகுக்கும் என்று ஊடகங்களில் வெளிவந்ததை சுட்டிக்காட்டி, இந்தச் சிக்கலை தவிர்க்க மதிப்பெண் பட்டியலுக்கு (MARK SHEET) பதிலாக அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்க இந்த ஆண்டு மட்டும் க்ரேட் முறையை (Grade system) அமல்படுத்துமாறு கல்வித் துறைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் ஆலோசனைகளை வழங்கி அறிக்கை வெளியிட்டார்.
இவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் பேட்ரிக் ரெய்மெண்ட் போன்றோர் மீது அரசாணையை விமர்சனம் செய்தனர் எனக் குற்றம் சாட்டி 17 (B) நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை ரத்து செய்ய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்". எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’குழந்தை மனது நோகக்கூடாதுனு இப்படி செஞ்சேன்’- நெகிழ வைக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்!