சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வரவேற்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதேநேரம், வழக்கமாக வழங்கக்கூடிய அகவிலைப்படியை, மத்திய அரசின் அறிவிப்புப்படி கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்காமல், ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கி, அதையும் கூடுதல் நிதிச் சுமை என செய்தி வெளியிட்டுள்ளது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போக்கானது இனிவரும் காலங்களில் மாதாந்திர ஊதியம் வழங்குவது, ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவதைக் கூட கூடுதல் நிதிச்சுமை என்று அரசு கருதுமோ? என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர், வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம் ? - ஓபிஎஸ் கேள்வி