சென்னை: 2021-22ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி, இயன்முறை மருத்துவம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், "பிறப்பு முதல் 18 வயதிற்குள்பட்ட ஏழாயிரத்து 786 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளி வயதை அடைந்த பிறகும், உயர் ஆதரவு தேவைப்படும் (பலதரப்பட்ட குறைபாடுகள், அறிவுசார் குறைபாடு, பெருமூளை முடக்குவாதம், மன இறுக்கம் மற்றும் பல) காரணத்தால் பள்ளிக்கு வர இயலாத நிலையில் உள்ளனர்.
அந்த மாணவர்களுக்கு கல்வி, இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை வீடுகளுக்கே சென்று வழங்கி அவர்தம் கற்றல் சூழலை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஒரு கல்வித் திட்டம் தொடங்கப்படும்.
7.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம்
ஒரு மாணவனுக்கு ரூ. 10,000 வீதம் ஏழாயிரத்து 786 மாணவர்களுக்கு ரூ. 7.80 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என அன்பில் மகேஷ் அறிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின்கீழ் 2021-2022ஆம் கல்வியாண்டில் வீட்டு வழிக் கல்வி பயிலும் ஏழாயிரத்து 786 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கும் வகையில், உயர் தொழில்நுட்ப உதவியுடன் வீட்டு வழிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பள்ளி,கல்லூரிகள் திறப்பு: மாணவர்களே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை!