சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவ ஆக்ஸிஜன் மிகவும் அத்தியாவசியமாகிறது. இதற்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், தென்னக ரயில்வே சார்பாக ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில் மூலமாக மருத்துவ ஆக்ஸிஜன் எடுத்துவரப்படுகிறது.
அந்தவகையில், 59ஆவது ஆக்ஸிஜன் ரயில் சத்தீஸ்கரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு 6 கண்டெய்னர்களில் 113.79 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை எடுத்துவந்துள்ளது. மற்றொரு ரயில் ரூர்கேலாவிலிருந்து தண்டையார்பேட்டைக்கு 126 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை எடுத்துவந்துள்ளது.
61ஆவது ஆக்ஸிஜன் ரயில் சேலம் மாவட்டத்துக்கு 86.22 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை எடுத்துவந்துள்ளது. 62 ஆவது ஆக்ஸிஜன் ரயில் ரூர்கேலாவிலிருந்து கோவை மாவட்டம் இருகூருக்கு 81.64 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கொண்டுவந்துள்ளது. 62 ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் 4494.11 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் வந்துள்ளது. கேரள மாநிலத்துக்கு 513.72 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் ரயில் மூலமாக சென்றுள்ளது.
இதையும் படிங்க: 1,000 டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவோம்: ஜே.எஸ். டபிள்யூ ஸ்டீல்