கரோனா நிவாரணமாக 15 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், தற்போது 144 தடை உத்தரவு உள்ளதால் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பெண்கள் வெகு தொலைவிலிருந்து கடைகளுக்கு வருவதில் சிரமம் உள்ளது.
இதனால் பல பெண்களுக்கு மருத்துவ விடுப்பு அளித்து வீட்டிற்குச் செல்லுமாறு துறை அலுவலர்கள் கூறியுள்ளதாகத் தகவல் வெளிவருகின்றன. இந்நிலையில், அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர். கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், "கரோனா அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு உணவு, சுகாதாரம், குடிநீர் இவைகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது அத்தியாவசியத் தேவையாக அமைந்துள்ளது.
அன்றாடம் தினக்கூலிக்கு சென்று அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தக்கூடிய ஏராளமான முறைசாரா தொழிலாளர்கள் பெரிதும் இக்காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனுபவித்து வரும் இன்னல்களை சொல்லி மாளாது.
இதுபோன்ற காலத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதுள்ள மெத்தனப் போக்கு என்பது மக்களை பசி பட்டினியில் கொண்டு சேர்த்து விடுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை, அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களை இலவசமாக அளிப்பது என அரசு முடிவு எடுத்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவைகள் முறையாக கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு உறுதியாக செய்திட வேண்டும்.
நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அலுவலகம் செல்ல எவ்வித வாகன ஏற்பாடுகள் இல்லாததால் அவருடைய இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு தற்காலிக பணிமாற்றம் செய்ய வேண்டும். ஊழியர்களின் பணிக்கு உதவியாக காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஒத்துழைப்பை அரசு உறுதி செய்திட வேண்டும்.
பயனாளிகளின் நேரத்தை குறைப்பதற்காக அனைத்து பொருட்களும் சரியான எடையுடன் முன்கூட்டியே பாக்கெட் செய்து வைப்பது அவசியம். கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்திடவேண்டும்.
போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். இப்பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் அனுமதித்திட வேண்டும். மிக முக்கியமாக இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு உறுதியான நம்பிக்கை அளிக்கக் கூடிய அளவில் அலுவலர்களின் நடவடிக்கை அமைந்திடவேண்டும். இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000