தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கு விரிவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெப்பச்சலனம் காரணமாகவும், குமரிக்கடல், இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும், கோவா, கர்நாடக கடலோரப் பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும் விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும்.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும், இன்று தமிழ்நாட்டில் ஒரு சில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொட்டும் மழையால் சாலையில் தேங்கிய மழை நீர்: உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக எம்எல்ஏ!