இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவந்த தொடக்கக் கல்வித் துறை, 1994ஆம் ஆண்டு, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தனித்துறையாக பிரிக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டுவருகிறது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை அதே பகுதியில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வசம் அளிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்க வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் இருக்கும் நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்னொரு பள்ளியை கண்காணிப்பார் என்பதும், ஆய்வு செய்வார் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
ஏனென்றால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டிய நிலையிலும், பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலையிலும் கடுமையான பணிப்பளுவைக் கொண்டுள்ள நிலையில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளையும் நிர்வகிக்க வேண்டும் என்பது எவ்விதத்திலும் இருப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் உதவாது.
இதுபோன்ற அரசாணைகள் எவ்விதத்திலும் கல்வி தரத்திற்கு உதவாது என்பதால் இந்த அரசாணைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப்பெற்று, தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித்துறையை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு திரும்பப் பெறாவிட்டால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலம் முழுவதும் தீவிரமான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்” என கூறியுள்ளார்.