சென்னை: தமிழ்நாட்டிற்கும், உத்தரபிரதேச மாநிலத்தின் காசிக்கும் இடையிலான கலாச்சார உறவை மேம்படுத்தும் வகையில், வாரணாசியில் "காசி தமிழ் சங்கமம்" நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. மத்திய அரசு ஏற்பாட்டில், ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
இதில் தமிழக பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்க ஏதுவாக, தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியை தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் பெரிய முயற்சியாக முன்னிலைப்படுத்தும் மத்திய அரசு, இதில் தமிழ்நாடு அரசை புறக்கணித்துவிட்டதாக பேசப்பட்டது.
இந்த நிலையில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று(நவ.25) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "மத்திய அரசு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து மாநில அரசிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் பயணச் செலவினங்கள் மற்றும் இதர இடர்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் வருடத்திற்கு 200 பேரை அழைத்துச் செல்ல 50 லட்சம் ஒதுக்கப்படும் என மானியக் கோரிக்கையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கும் மத்திய அரசின் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசின் சார்பில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும். மீட்கப்பட்ட இடத்தில் வருவாய் நோக்கத்தோடு பணிகளை மேற்கொள்ளாமல், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் விக்டோரியா மஹாலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. எந்த இடத்திலும் பணியாளர்களைக் கூட நிறுத்தவில்லை. யாரையும் நிறுத்தக் கூடாது எனவும், யாரையும் பணியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணியாளர்களை நியமிக்கக் கூடாது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு சிவராத்திரி திருவிழாவானது இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக காளிகாம்பாள் திருகோயிலில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சிவராத்திரி திருவிழா 5 இடங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு அதிகளவு வந்து செல்கின்றனர். இந்தக் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'காசி தமிழ் சங்கமம்' பாவத்தை கழுவ முடியாது என முரசொலி தாக்கு! பாஜகவின் பதிலடி என்ன?