சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினரால் ரூபாய் 53,72,001 மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
1,650 பறக்கும் படைகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளது.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 1,650 பறக்கும் படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகுதியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
ஜனவரி 29 வரை பணம் மற்றும் பொருள்கள் பறக்கும் படையினரால் 40,40,831 ரூபாயும், ரூபாய் 12,57,080 மதிப்புள்ள 15 லேப்டாப்கள், 40 மொபைல் போன்கள், 19 துண்டுகள், 140 பித்தளை குத்து விளக்குகள் மற்றும் ரூபாய் 74,090 மதிப்புள்ள மதுபானப் பாட்டில்கள் உள்ளடக்கிய ரூபாய் 53,72,001 பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.