சென்னை: திருச்சியில் கடந்த மாதம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவர் தப்பிச்செல்ல முயன்ற போது போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபிரகாஷ், தஞ்சாவூர் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் பிரவீன் ஆகியோர் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
கோவையில் ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கெளதம், ஜோஸ்வா ஆகியோர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக, அவர்களை காலில் சுட்டு காவவல்துறை பிடித்தனர். அதேபோல் மதுரை சத்தியபாண்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராஜா தப்ப முயற்சித்த போது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 ரவுடிகள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
காவல் துறையினர் தற்காப்புக்காக இந்த துப்பாக்கி சூடுகள் நடத்தியதாக கூறினாலும், இவை போலி எண்கவுண்டர் என பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜிக்கு மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கோவை ரவுடி கெளதம் தலைமறைவாக இருந்தபோது, கஞ்சா விற்பனை செய்ததாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். கெளதமின் மனைவி மோனிஷா, மனைவியின் சகோதரி தேவிஶ்ரீ மற்றும் தாயார் பத்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அப்போது, தனது குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாக கெளதம் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தான் கடந்த சில ஆண்டுகளாக எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் ஒழுக்கமாக வாழ்வதாகவும், இந்த நிலையில் போலீசார் தன்னை என்கவுன்டர் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தார். தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், தற்போது தான் வாழ நினைப்பதாகவும், போலீசார் வேண்டுமென்றே தன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், சரண்டர் ஆனாலும் போலீசார் கொன்றுவிடுவார்கள் என பயமுறுத்துகிறார்கள் என்றும் கூறினார். இது தொடர்பாக போலீசார் தன்னிடம் பேசியதாக ஆதாரத்தையும் அந்த வீடியோவில் கெளதம் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நானும் பிள்ளைகுட்டிக்காரன் தான்..' - கதறும் கோவை ரவுடி!