சென்னை: இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈடிவி பாரத்துக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் எப்போது வெளியாகும்?
”தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளன. அவை முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிடப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து நேற்று (ஜூன்.07) தீவிர ஆலோசனை நடத்தியுள்ளோம். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அறிவித்தால், தற்போது உள்ள சூழலில் குழந்தைகள் கூட்டமாக வந்து சேரக்கூடாது.
எனவே, தளர்வுகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு அளிக்கப்படுகிறதோ அவற்றின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் மாணவர்கள் சேரக்கையை ஆன்லைன் மூலம் செய்யவார்கள். அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நேரடியாக வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு எடுக்கவுள்ளோம்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த அடிப்படையில் வழங்கப்படும்?
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களை எவ்வாறு வழங்க உள்ளோம் என்பதைத்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் உற்று நோக்கிக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக தினமும் முதலமைச்சர் கேட்டுவருகிறார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு முதலமைச்சர் குழுவை அமைத்துள்ளார். இக்குழுவிற்கு வரும் கருத்துகளின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து முடிவு எடுக்கப்படும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து தற்பொழுது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. மதிப்பெண் வழங்குவதற்கு அமைக்கப்பட்ட குழு அமர்ந்து பேசி, அனைத்து தரப்பிலும் கருத்துகளை கேட்டறிந்தப் பின்னர், அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் குழு அளிக்கும் அறிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். முதலமைச்சரும் பல தரப்பில் கருத்துகளை கேட்டு, திருப்தி அடைந்தால் மட்டுமே அனுமதி வழங்குவார்.
அதன் பின்னர்தான் மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்யப்படும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவினர், ஆன்றோர், சான்றோர்களின் கருத்துகளைப் பெற்று எவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம்.
மேலும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் இரண்டு வார காலம் அவகாசம் அளித்துள்ளதால், அவர்கள் அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு இருப்பார்கள். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டுதல் குழு அதற்கான முடிவை வேகமாவும், நல்ல முறையிலும் எடுக்கும்.
பாலியல் குற்றச்சாட்டுகள் எழும் பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுமா?
பள்ளிக்கல்வித் துறைக்கு பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வரும் புகார்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் விளக்கம் கேட்கிறோம். அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கமும் செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கைக்கு செல்லும்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர். காவல் துறை, முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ளதால், தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடத்தப்படுமா? நீட் தேர்வில் அரசின் நிலைப்பாடு என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோதும், ’நீட் தேர்வு வேண்டாம்’ என்பதுதான் திமுகவின் நிலைப்படாக இருந்தது. தற்போது, தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் நீட் வேண்டாம் என்பதுதான். எந்தக் காலக்கட்டத்திலும் தமிழ்நாட்டில் நீட் வரக்கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதில், எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதைதான் வலியுறுத்தி முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் 12ஆம் வகுப்புத் தேர்வினை ரத்து செய்யும்போது, நீட் தேர்வையும் ரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கக்கூடாது. அதேபோல் வேறு எந்தவகையிலும் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்ற வகையில், முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த வகையில் தமிழ்நாட்டில் நீட் வராமல் இருப்பதற்கு இருக்கும் வழிமுறைகளை கண்டிப்பாக எடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படிதான் 12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவார்களா? பேட்ரிக் ரெய்மாண்ட் பகிர்வு