கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் மூடங்கியுள்ளது. இதனைச் சரிசெய்யும்விதமாக கரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய அரசு மூன்று மண்டலங்களாகப் பிரித்து ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்த முடிவுசெய்துள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் குறிப்பிட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், நாளை மறுநாள் முதல் நடைமுறைக்கு வரும் அலுவலகங்கள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் தளர்வுகள், விதிமுறைகள் குறித்தும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் குறித்தும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தளர்வுகளை அமல்படுத்துவதற்கு முன் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை போக்கும்வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயல்படவுள்ள அலுவலகங்கள், பணியிடங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் சமூக இடைவெளி தொடர்பாக அனைத்து ஆயத்த ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் நலனிற்காக அனுமதிக்கப்பட்ட துறைகளைத் தவிர பிற துறைகளும் செயல்படவேண்டியுள்ளதால், அவற்றைக் குறித்த தகவல்களை சேகரிக்கவுள்ளன. தளர்வுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள், சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல் ஆகியவை அடிப்படையிலேயே அனைத்துத் துறைகளும் செயல்பட வேண்டும்.
கரோனா நிவாரண பணிகளுக்காகச் செல்லும் விமானங்கள், முன் அனுமதி பெற்ற தனி விமான பயணம், சரக்கு விமான போக்குவரத்து, பெட்ரோலிய பொருள்களின் விநியோகம், உணவுப்பொருள்களின் கொள்முதல் ஆகியவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் எனவும், ஒரு வாகனத்திற்கு ஒன்று அல்லது இரண்டு ஓட்டுநர்கள், ஒரு உதவியாளர் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரயில், விமான நிலையங்களுக்குப் பயணிப்போரின் நலனிற்காக மாநில, யூனியன் பிரதேச அலுவலர்களால் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் உணவகங்கள், வாகன பழுதுபார்க்கும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்யும் வண்ணம் மளிகைக் கடைகள், வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக சேவைகள் செயல்படும்.
மேலும், சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், மாநில அரசுகள் நிர்ணயித்த கால அளவுகளின் அடிப்படையில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளின் வாயிலாக அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்ய ஊக்குவிக்கவும், மருந்துப் பொருள்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், இறைச்சிக் கடைகள், கால்நடைத் தீவனங்கள் விற்பனை நிலையம் போன்றவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு வெளியே தனி நபர்களின் நடமாட்டத்தைக் குறைக்க, மாவட்ட அலுவலர்கள் அத்தியாவசிய பொருள்களை வீடு வீடாக விநியோகிக்கும் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலே கூறிய அனைத்து நிறுவனங்கள் செயல்படுவதற்கான விதிமுறைகள் சிலவற்றை அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
1.அலுவலகங்களின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்.
2. வெளியிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
3. வாகனங்களில் 30 முதல் 40 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
4. வளாகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கட்டாயமாக கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
5. பணியிடத்திற்குள் நுழைந்து வெளியேறும் அனைவருக்கும் கட்டாய உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
6. தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
7. வேலைசெய்யும் இடங்களில் ஷிப்ட்டுகளுக்கு இடையில் ஒரு மணிநேர இடைவெளி இருக்குமாறும், சமூக இடைவெளியை உறுதிசெய்யுமாறும் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
8. அலுவலக கூட்டங்களில் ஒருவர் மற்றவரிடமிருந்து ஆறு அடி தூரத்தில் விலகி அமருமாறு இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
9. 4 நபர்களுக்கு மேல் (அளவைப் பொறுத்து) லிஃப்ட்டுகளில் பயணிக்க அனுமதிக்கப்படக் கூடாது.
10. பணியாளர்கள் படிகளில் பயணிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
11. அலுவலகங்களில் குட்கா, புகையிலை போன்றவற்றிற்கு கடுமையான தடைவிதிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தடைசெய்ய வேண்டும்.
12. அலுவலகங்களில் அந்நியர்கள் நுழையத் தடைவிதிக்கப்பட வேண்டும்.
13. கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் அருகில் இருக்க வேண்டும்.
14. அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பினையும் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கரோனா நடவடிக்கைகள் சிறப்பு - ராகுல் பெருமிதம்