கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மாநிலத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போதுவரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வண்ணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இலவசமாக அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரோனா தொற்று காரணமாக வரும் 31ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் முன்னதாகவே, இவ்வாண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டன.
இதைப்போலவே, இம்மாதமும் (ஜூலை) குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆணையிடுவதற்கு முன்பு, அதாவது ஜூலை ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் அதற்கான விலை கொடுத்து பெற்றுள்ளனர். அவ்வாறு வாங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்தத் தொகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும்.
இவர்களுக்குச் கைப்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், இதற்குரிய பதிவுகள் விற்பனை இயந்திரத்தில் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்கள், இம்மாதத்திற்குத் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலைக் கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.