சென்னை: இந்திய குடிமைப்பணி தேர்வெழுத பயிற்சி பெறும் மாணவர்களுடன் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் ஊக்கம் தரும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிண்டி ராஜ்பவனில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்திய குடிமைப்பணிக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்று தங்கள் கேள்விகளையும், குடிமைப்பணி குறித்த சந்தேகங்களையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கேட்டனர்.
தமிழ்நாடு ஆளுநர் முதலில் மாணவர்களை அறிமுகம் செய்துகொள்ள அறிவுறுத்தி்னார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் பெயர், மாவட்டம், படிப்பு ஆகியவற்றைக் கூறி சுய அறிமுகம் செய்து கொண்டனர். மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு முடிக்கும் வரையில் நின்று கொண்டு கேட்டறிந்தார். அதன் பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கும் நின்று பதிலளித்தார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துப் பேசும்போது, “மின்சாரம் இல்லாத, சாலை இல்லாத சூழலில் பிறந்து வளர்ந்தேன். 8 கிலோ மீட்டர் கடந்து பள்ளி சென்று படித்தேன். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளைக் கடந்து செல்லும் போது காலணிகளை கையில் எடுத்துக்கொண்டு கடந்துள்ளேன். பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் உதவுவார்கள். என் சிறுவயதில் என் தந்தையை இழந்தேன். என் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது கடினமாக இருந்தது.
ஆனால், அப்போது அந்த காலகட்டம் கடினமானதென நான் நினைக்கவில்லை. இப்போது தான் அவை சற்று கடினமானதாகத் தெரிகிறது. முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் வரை கூட விடுதி அறையில் மின்விசிறி இருந்ததில்லை. மரத்தின் இலைகளை விசிறியாகப் பயன்படுத்தியதும் உண்டு. அதெல்லாம் அப்போது மிகவும் வசதியானதாகப் பார்க்கப்பட்டது. என் கனவு Astro physicistஆவதாக இருந்தது. ஆனால், வாழ்க்கை என் பாதையை மாற்றியது.
குடிமைப் பணியாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள். சில வேளைகளில் தவறாகக் கூட முடிவுகள் எடுக்க நேரிடலாம். நானும் சில தவறான முடிவுகளை எடுத்திருக்கிறேன். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது. இல்லையெனில், நீங்கள் தகுதியற்றவராகிவிடுவீர்கள். திருக்குறள் படித்து நான் உத்வேகம் அடைந்தேன். இரண்டு வரிகளில் கருத்துகள் உள்ளன. தமிழ் மிக அற்புதமான படைப்புகளைக் கொண்டுள்ளது. திருக்குறளில் பல ஆழமான கருத்துகள் உள்ளன. தமிழ் மொழியின் மிகப்பெரிய சொத்து, திருக்குறள்.
ஆனால், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டாலும் அதன் ஆழமான கருத்துகளை முழுமையாக கூற முடியவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியமாகியது. வெறும் பட்டங்களுக்காக வேலை கிடைக்கும் நிலை இப்போது இல்லை. செயல் திறன் , அறிவுத்திறன், சிந்தனை அனைத்தையும் கருத்தில்கொண்டு தான் இப்போது வேலை கிடைக்கிறது. கடினமான நிலையிலும் சிந்திக்கும் திறன்களையும் அதிகரிக்கும் வகையிலேயே புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நமது பொருளாதாரத்தை குலைக்க நினைத்தால் பயங்கரவாதத்தைக் கையில் எடுப்பார்கள். அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு முன் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இல்லை. அமெரிக்கா தாக்கப்பட்ட பிறகு, ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள் பலனளிக்க ஆரம்பித்தன. சர்வதேச ஒத்துழைப்புக்கு மிகுந்த உழைப்புத்தேவை. 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை உலகம் முக்கியமாக கருதவில்லை. ஆனால், இன்று சர்வதேச விவகாரங்களில் இந்தியா ஏதாவது கூறினால் அது கவனத்தைப் பெறுகிறது.
ஐக்கிய நாடுகளை விட ஜி 20 பலம் மிக்க அமைப்பாகும். அந்த அமைப்பில் உலகுக்கு வழிகாட்ட இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.
நாகாலாந்து வாழ்க்கை: “நாங்கள் இந்தியர்கள் அல்ல, தனி நாடு வேண்டும் என கேட்ட நாகா மக்களுடன் தொடர்ந்து பேசினேன். 2 ஆயிரம் கிராமத் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். எந்தவித காவலும் இல்லாமல் அவர்கள் வீடுகளில் தங்கி, உறங்கி நண்பர்களாகத் தொடர்ந்து பேசினேன். அவர்கள் தங்கள் கோரிக்கையை கைவிட்டனர். மரபுசார எரிசக்தி (Green Energy) நோக்கி நாம் நகர வேண்டும்.
2070ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றாத ஆற்றலை நோக்கி நகர வேண்டும். பசுமை ஆற்றலை முதன்மை எரிபொருள், எனர்ஜி ஆக கருதவில்லை என்றால் உலகம் பெரும் பேரிடரைச் சந்திக்கும். சீருடைப் பணிகளில், பொதுவாக பெண்களை வலுவற்றவர்கள் எனக் கருதுகின்றனர். அந்த நிலை தற்போது மாறி வருகிறது.
குடிமைப் பணிக்குத் தயாராக ஆலோசனை: இந்தியக் குடிமைப்பணிக்கு தயாராகும் மாணவர்கள், ஒற்றை இலக்கை நோக்கி திடமான மன உறுதியுடன் பயணியுங்கள், அதற்கான நேரத்தை கூடுமான அளவில் ஒதுக்குங்கள். குறைந்தது 13-14 மணி நேரத்தை அதற்காக ஒதுக்குங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள், அதிக கவனம் செலுத்த வேண்டியதாக உணரும் பாடத்திற்கு கூடுதல் நேரத்தினை ஒதுக்குங்கள். படிப்பது மட்டும் போதாது, படிப்பதை எழுதுங்கள்.
கற்றதை எப்படி செயல்படுத்துவது என சிந்தியுங்கள். குடிமைப்பணித்தேர்விற்காக படிக்கும் காலத்தில் பிறரைச் சந்திப்பது, தினமும் படிப்பதில் இருந்து விலகுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பொழுதுபோக்கிற்கு, உங்களது கவனத்தை திசை திருப்புபவைக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். செய்யவேண்டியதை அந்த நேரத்தில் செய்யுங்கள், தட்டிக்கழிக்காதீர்கள். உங்களது மன உறுதி உங்களிடம் தான் உள்ளது. புற உலகில் இல்லை.
படிப்பதுடன் சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள். ஜிம்மிற்கு சென்று அதிக அளவிலான உடற்பயிற்சி செய்வதும் உங்களை சோர்வடைய செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உடல் நலத்தைப் பேணவேண்டும். நல்ல உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள். கடைகளில் கிடைக்கும் உணவை வாங்கி உண்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்டால் பயிற்சி பெறுவதிலும் சுணக்கம் ஏற்படும். தினமும் செய்தித்தாள் வாசியுங்கள், எல்லா செய்தித் தாள்களையும் வாசித்து நேரத்தை வீணாக்காதீர்கள். 20-25 நிமிடங்கள் செய்தித் தாள் வாசித்தால் போதும்.
செய்தித்தாள்களில் அரசியல்வாதிகள் என்ன கூறினார் என்று தேடி படிக்காதீர்கள். அவை வேலையற்றவர்கள் செய்வது. நீங்கள் அரசு கொள்கைகள் பற்றி, உதாரணமாக ஜி 20 மாநாடு, தமிழ்நாடு - கர்நாடக நீர் பங்கீட்டுப் பிரச்னையில் முக்கிய செய்தி இருந்தால் அதை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள். கவனம், நேர மேலாண்மை, உடல் நலன் இவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.யார் உங்களைப் பற்றி குறை கூறினாலும் கவனத்தை அதில் செலுத்த வேண்டாம்.
உயர் கல்வியில் சேரும் பெண்களைவிட வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பெண்கள் வீட்டு வேலை எவ்வளவு செய்தாலும் அது பேசப்படுவது இல்லை. ஆனால், ஆண்கள் வெளியில் சென்று 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 1990-களின் தொடக்கத்தில் வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள்.
ஆனால், பல இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி முறையாக இல்லை. தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் பல வகையான பணிகளுக்குச் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதால், பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். இந்திய குடிமைப்பணிக்குத் தயாராகும் உங்களை யாராவது கிண்டல், கேலி, உதாசீனம் செய்தால் அமைதியாக இருந்து உள்வாங்குங்கள். அதற்குப் பதிலடியாக சாதித்துக்காட்டுங்கள்.
நான் பணியில் சேர்ந்தபோது எனது சம்பளம் 720 ரூபாய், 10 ரூபாய் ஊதிய ஊதிய உயர்வு கிடைக்கும். ஆனால், இன்று குடிமைப் பணியாளர்களுக்கு பணியில் சேரும்போதே லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும் உங்களுக்குத் தேவையான வசதிகளும் ஏற்படுத்தி தரப்படுகின்றன. அர்த்த சாஸ்திரத்தில் கூறியது போன்று, உங்கள் கையில் கொடுக்கப்பட்டதே , மக்களுக்கு கொடுப்பதற்குத் தான். அது போல தான் அதிகாரம் மக்களுக்கு சேவை செய்யவே. இதில் இருந்து விலகுபவர்கள், அதன் விளைவுகளை சந்தித்து வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: "வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், வன்முறைக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்" - பிரதமர் மோடி