உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் (89), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுற்றுவந்தார். இதற்காக அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 21) அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கல்யாண் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”கல்யாண் சிங் மறைவுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் என பல பொறுப்புகளை வகித்தார்
கல்யாண் சிங் ஒரு உன்னதமான மனிதர். அவர் உத்தரப் பிரதேச முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தார். அதுமட்டுமல்லாது மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்த தேசம் அவரை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் அவரது கடின உழைப்பு, உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக அவரது பங்களிப்புகளை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்
அவரது மறைவு உத்தரப் பிரதேச மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு. கல்யாண் சிங் இழப்பால் துயரம் அடையும் அவரது குடும்பம், உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவரது இழப்பைத் தாங்கிக்கொள்ள இறைவன் அவர்களுக்கு மனவலிமை கொடுக்க பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.