சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமனம் செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி கேட்ட கேள்விகளுக்கான விளக்கம் தயார் செய்யப்பட்டு, ஆளுநர் மாளிகைக்குத் தமிழ்நாடு அரசு இன்று (31.08.2023) அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி அமைப்பாகும். இதன் தலைவராகப் பதவி வகித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தலைவர் பதவி நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. எனவே 4 உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த சைலேந்திர பாபு, கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான தமிழ்நாடு அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
இதையும் படிங்க: "ஆட்சி மாற்றத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல் செயல்படுகிறது" - ஓபிஎஸ் வழக்கில் நீதிபதி காட்டம்
அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபுவை நியமனம் செய்யத் தமிழ்நாடு அரசு ஆளுநருக்குக் கோப்பு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்பட்டது. பின்னர், அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார்.
உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் பின்பற்றப்படவில்லை, நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா?, நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் என்ன? என ஆளுநர் அந்தக் கோப்பில் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கான காரணங்கள், பின்பற்றப்பட்ட சட்ட விதிமுறைகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள், தேர்வாணையத்தின் சட்ட விதிகள் உள்ளிட்ட விவரங்கள் ஆவணங்களாகத் தயார் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் எழுப்பிய கேள்விகளும், அதற்கான விளக்கங்களும் அதில் இடம் பெற்றுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: 5 நாட்கள் சூறாவளி பயணம்.. அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கை.. இளைஞர் அணியினர் உற்சாகம்!