ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்துவந்தனர்.
அவர்களது கோரிக்கைக்கு ஏற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான இந்த அறிவிப்பை சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கும் சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஏராளாமானோர் வரவேற்பு தெரிவித்தனர். எனினும், அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.
அதற்கான முறையான நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசாணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள்பட்ட நிலங்களை வேளாண்மைப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம்.
அதிக விளைச்சலைக் காணும் பொருட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். வேளாண் தொழில்கள் தொடர்பான தொழிலகங்களைத் தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படும் என விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும், வேளாண் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விதிகள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.