கரும்பு நிலுவைத் தொகையை வழங்காமல் விவசாயிகளை கசக்கிப் பிழிகிறது சர்க்கரை ஆலைகள். இதனால் கரும்பு விவசாயிகள் தங்கள் வாழ்க்கை கசந்து கிடக்கிறது என்கின்றனர். கரும்பு சாகுபடியில் ஏன் ஈடுபட்டோம் என வருந்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசும், சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளின் அவல நிலையை உணராமல் இருக்கின்றன.
25 ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு விவசாயத்திற்கு இருந்த மதிப்பால் தமிழ்நாட்டில் ஏராளமான விவசாயிகள் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டனர். தென்னிந்தியாவில் கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது. இந்தக் காரணத்தால் மாநிலத்தில் சர்க்கரை ஆலைகளும் பெருகத் தொடங்கின. தற்போது மாநிலம் முழுவதும் 26 தனியார் சர்க்கரை ஆலைகள், 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. சர்க்கரை உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தது. இந்த நிலை தொடரவில்லை.
மத்திய, மாநில அரசுகளும், சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்காமல் ஏமாற்றத் தொடங்கின. அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு வழங்காமல் சர்க்கரை ஆலைகள் அலைக்கழித்தது. ஓராண்டு உழைத்து சாகுபடி செய்த கரும்பை ஆலைகளுக்கு அனுப்பிவிட்டு கொள்முதல் தொகைக்காக ஆலைகளின் வாசலில் மாதக்கணக்கில் விவசாயிகள் காத்துக் கிடக்கும் அவல நிலை உருவானது.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மாநில அரசு அறிவித்த ஆதார விலையை சர்க்கரை ஆலைகள் வழங்கவில்லை. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்பில் டன் ஒன்றுக்கு சுமார் 300 ரூபாய் வரை ஆலைகள் வழங்காமல் ஏமாற்றி உள்ளதாக புகார்கள் உள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தும் நிலுவைத் தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாயி, தன்னை விவசாயி என சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரும்பு விவசாயிகளின் பிரச்னையை இதுவரை தீர்க்கவில்லை. இனிவரும் அரசு எதுவாக இருந்தாலும், கரும்பு விவசாயிகளின் இப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றார்.