சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு, இடஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திவந்தனர். இதனால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழை எளிய மக்களின் மன நிலைகளை மனதில் வைத்துக்கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மருத்துவர்களை மக்கள் கடவுளாகப் பார்க்கின்றனர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று எச்சரிக்கைவிடுத்தார்.
இந்நிலையில், கடந்த எட்டு நாள்களாக நடைபெற்றுவந்த காலவரையற்ற போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஆயிரத்து 613 மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினர்.
இது குறித்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் பேசுகையில், "மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்படுகிறது. போராட்டத்தைக் கைவிட்டால் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்து பேசப்படும் என அமைச்சர், முதலமைச்சர் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாகத் திரும்பப்பெறுகிறோம்.
நோயாளிகளின் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் அளித்த வேண்டுகோளை ஏற்கிறோம். வேலைநிறுத்தம் எட்டு நாள்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.