‘தமிழ்நாடு நாள்’ விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், ஜெயக்குமார், உதயகுமார், தலைமை செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய துணை முதலமைச்சர், "மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் பழம்பெருமையை வெளிக்கொண்டுவர கீழடி ஆய்வு நடக்கின்றது. கீழடி ஆய்வு மூலம் தமிழர்களின் தொன்மை, பழமை வெளி உலகுக்கு தெரியவரும்" என்றார்.
அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘1963ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு மாநிலங்களவையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பேசிய போது, பல தமிழ் நூல்களில் தமிழ் பெயர் இடம் பெற்றதை மேற்கோள் காட்டினார். மூன்று பக்கம் நிலம், ஒரு பக்கம் கடல் எல்லையாகக் கொண்டது 'தமிழ்நாடு' என்று பொருள். தமிழ்நாடு பெயர் மாற்றினால் நாங்கள் திருப்தி அடைவோம் என்று அண்ணா பேசினார். மெட்ராஸ் தொடர்ந்தால் தவறில்லை, தமிழ்நாடு என்று வந்தால் தமிழ் தொன்மை அறியப்படும். தனிநாடு என்று வந்தால் மெட்ராஸ் அதன் தலைநகரம் என்று வரும் என அண்ணா தெரிவித்தார். 1968ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' பெயர்மாற்றம் செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’ என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடியில் அமைக்கப்பட்டு, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கபட உள்ளது என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்!